இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் – ஜனாதிபதி
வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயற்படும் அமைப்பொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்ட கைவினைஞர்கள், மீனவர்கள் மற்றும் விவசாய சமூகத்தினருடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் யாழ்.பல்கலைக்கழக கல்வி ஊழியர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீ சத்குணராஜா தலைமையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.