இலகு ரயில் திட்டத்தை மிக விரைவில் தொடங்க ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை
இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தையினை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பான் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போது இத்திட்டத்தை மீள் மதிப்பீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்காக செலவிடப்பட்ட தொகை முதல் மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்துடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி அடுத்த வருடத்தில் பொது வசதிகள் இடமாற்றம் மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை தெரிவித்தார்.
இலகுரக ரயில் திட்டத்திற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. மாலபே முதல் கோட்டை வரை நிர்மாணிப்பதற்கான விரிவான திட்டங்கள், ஒப்பந்த ஆவணங்கள், டெண்டர் ஆவண மதிப்பீடுகள் மற்றும் கண்காணிப்புச் சேவைகளை வழங்குவதற்காக சர்வதேச ஆலோசனை நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படைகளுக்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை சேவைகளுக்காக நியமிக்கப்பட்ட நிறுவனம் கோரியுள்ள சேதங்களை ஆய்வு செய்யவும், இலகுரக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும் பேச்சுவார்த்தைக் குழுவொன்றை அமைச்சரவை நியமித்துள்ளது. இதற்கிடையில், JICA நிறுவனம் பெற்ற கடன் தொகையில் இருந்து திட்டத்திற்காக செலுத்த ஒப்புக்கொண்டது. ஆனால் கடன் அமுல்படுத்தப்படாமல் பணம் செலுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.