மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகமாக ஒன்றிணைக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி அறிவித்தார்
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய மலையக தமிழ் மக்களுக்கும் இலங்கை சமூகத்திற்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இன்றி அவர்களை ஒன்றிணைக்கும் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
இன வேறுபாடின்றி அனைவருக்கும் உரிமைகளை வழங்குவதன் மூலம் அனைத்து இலங்கையர்களையும் ஒன்றிணைத்து அபிவிருத்தியடைந்த தேசத்தை உருவாக்குவதே இலக்கு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மலையக மக்கள் இந்த நாட்டிற்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (02) இடம்பெற்ற நாம் 200 நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொட்டகலை, மவுண்டன் எஸ்டேட், திம்புல துணைப்பிரிவில் இந்திய உதவியுடன் தொடங்கப்படும் 10,000 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அதனைத் தொடர்ந்து, அட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள கணினி ஆய்வகம் மற்றும் கேட்போர் கூடத்தின் மெய்நிகர் திறப்பு விழாவும், பள்ளி மாணவர்களுக்கான கல்விப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வழங்கிய ஆதரவின்றி இன்றைய விழா கூட சாத்தியமில்லை என ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறுதிப்பாட்டை அவர் பாராட்டினார்.
இதன் பின்னர் மலையக தமிழ் மக்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அவர்களுக்கான சொத்துரிமை, கல்வி உள்ளிட்ட சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தன்னை அர்ப்பணிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.