யுக்தியே நடவடிக்கை; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு முறையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும் – பாதிக்கப்பட்டோர் கடிதம்
தந்திரோபாய நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குழுவொன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை நாடியுள்ளது.
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது, சட்டவிரோத மற்றும் ஒழுக்கக்கேடான செயற்பாடுகளைத் தடுப்பதற்கான வழிகாட்டல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், பாதிக்கப்பட்ட குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அந்தக் குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தந்திரோபாய நடவடிக்கையானது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கும் சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் வழிவகுக்கும், இது பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று குழு அச்சம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று அதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் சாசனம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையில் செயற்படுவது துரதிஷ்டவசமான நிலை எனவும், சட்டத்தின் ஆட்சியை பாரியளவில் சீர்குலைப்பதாகவும் இந்த தந்திரோபாய நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக பொலிஸார் தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிபாரிசு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.