சந்திரிகா குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைவதை முன்னிட்டு நாளை காலிமுகத்திடலில் பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நடைபெறவுள்ள நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்க கட்சியின் தற்போதைய தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளதாகவும் எனினும் சந்திரிக்கா குமாரதுங்க இதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை என சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கத்தின் ஒரு அங்கமாகவே முன்னாள் ஜனாதிபதி மீண்டும் கட்சியில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு மற்றும் மத்திய குழுக் கூட்டங்கள் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.