இந்தியாவில் ஒரே நாளில் 335 புதிய கொரோனா பாதிப்பு; 5 பேர் உயிரிழப்பு.
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 1701 ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் ஜே.என்.1 வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்ட கேரளாவில் உயிரிழந்தவர்களில் 4 பேரும், மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவில் மொத்தம் 4.50 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4.46 கோடி பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தேசிய அளவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 98.81. இதுவரை 533316 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். என்று கூறப்படுகிறது
கேரளாவில் JN.1 பாதிப்பு: கேரளாவில் 78 வயதான ஒரு பெண்மணிக்கு JN.1 இன் புதிய துணை வகை நவம்பர் 18 அன்று RT-PCR மூலம் கண்டறியப்பட்டது. அவருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும், இப்போது அவர் கோவிட் நோயிலிருந்து மீண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. .
முன்னதாக அக்டோபர் 25ஆம் தேதி திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழர் ஒருவருக்கும் ஜேஎன்.1 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், திருச்சியிலும், தமிழகத்திலும் வேறு எங்கும் பாதிப்பு இல்லை. இந்தியாவில் வேறு எங்கும் JN.1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த மாதம் சிங்கப்பூர் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது கேரளாவில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இது வைரஸின் துணை வகை, மக்கள் பீதியடைய தேவையில்லை, நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முதியோர்களுக்கு எச்சரிக்கை: கேரளாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1324 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோழிக்கோட்டைச் சேர்ந்த குமரன் (77), கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களின் இறப்புக்கு முதுமை மற்றும் கூட்டு நோய்களே காரணம் என்றும், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.